பதிவு செய்த நாள்
09
ஜன
2024
05:01
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த கடம்பூரில் விஜயநகர ஆட்சிக்கால தான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட, வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த, பாலமுருகன், பழனிச்சாமி, சிற்றிங்கூர்ராஜா ஆகியோர் திருக்கோவிலூர் அடுத்த கடம்பூர் கிராமத்தில் உள்ள வேம்பியம்மன் கோவில் எதிரில் இருக்கும் விஜய நகர சீரங்க மகாதேவர் காலத்திய கற்பலகை கல்வெட்டுக்களை கண்டறிந்து படிஎடுத்தனர். எட்டு அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டின் முன்பக்கம் சூரியன், சந்திரன், திருவண்ணாமலையை குறிக்கும் சிற்பம், பெரிய அளவு சூலம் பொறிக்கப்பட்டுள்ளது. பலகையின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம். சீரங்க தேவ மகாராயர் உத்தரவுப்படி செவ்வப்ப நாயக்கர் தருமமாக, வேட்டவலம் ஜமீனை சேர்ந்த தாண்டவ வாணாதிராயர், திருவண்ணாமலை, திருக்கோயிலுக்கு ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தின் போது நடைபெறும் ஏழாம் நாள் திருவிழாவிற்கு உபயமாக முடியனுர் பற்றில் உள்ள கடம்பூர் கிராமத்தில் குறிப்பிட்ட நான்கு எல்லைக்குள் உள்ள நிலம் காணியாட்சியாக விடப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கைக்கொண்டு ஒவ்வொரு வருஷமும் வேட்டவலம் வானாதிராயர் பொன்னும் நெல்லும் அளித்து திருவிழாவை நடத்தி வர வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தர்மத்துக்கு தீங்கு நினைப்பவர்கள் கங்கை கரையிலே காராம்பசுவை கொன்ற பாவத்திலே போகக் கடவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 40 வரிகளை கொண்ட இக்கல்வெட்டு விஜயநகர அரசர் ஸ்ரீரங்க மகா தேவரின் மூன்றாம் ஆண்டில் அதாவது சக ஆண்டு 1497 இலும், பொது ஆண்டு 1675 ல் வெட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.