தொடர் விடுமுறை; பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2024 06:01
பழநி; பழநி முருகன் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
பழநி முருகன் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை உள்ளது இன்று முதல் பொங்கல்விழா தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. தைப்பூச விழா ஜன.,19 துவங்க உள்ளதால் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தைப்பூச பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து, அழகு குத்தி, கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
கிரிவீதி பகுதியில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது. ஆனால் சிறு சிறு கடைகள் தற்போது முளைத்துள்ளன. தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் எளிதில் நகர்த்திச் செல்லக்கூடிய கடைகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வெளிமாநில வியாபாரிகள் சிலர் பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் அடிவாரம் கிரிவீதி, அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெறுகின்றனர். மேலும் மலைக் கோயிலில் பொது தரிசன வழி மற்றும் கட்டண தரிசன வழிகளில் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் செல்போன் அலைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லாத போதும் சில பக்தர்கள் அலைபேசிகளை எடுத்துச் செல்கின்றனர்.
கூட்டம் அதிகரிக்கும் நிலையில் மேலும் கூட்ட நெரிசலில் குழந்தைகள், சிறுவர்கள் தவறி செல்லும் சூழல் அதிகரித்துள்ளதால் பொது அறிவிப்பு மையங்களை அதிகரித்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரிசனம் முடிந்து பக்தர்கள் சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். நேற்று போதுமான பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அதிக அளவில் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். மேலும் பஸ்ஸில் சீட் பிடிக்க ஏறும் பயணிகளுக்கும் நடத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும் நெடுந்தூர பயண பேருந்துகளில் செல்லும் வழியில் உள்ள நகர நிறுத்தங்களில் இறங்கும் பயணிகளை அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பின்பு பஸ்ஸில் ஏற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.