பதிவு செய்த நாள்
14
ஜன
2024
06:01
சென்னை: தமிழர் திருநாளாகிய தைப் பொங்கலுக்கு முதல் நாள் வரும் போகி பண்டிகை இன்று (ஜன.,14) தமிழகம் மற்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இதுநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி” என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி” என்றாகிவிட்டது. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் “நிலைப் பொங்கல்” நிகழ்வுறும். வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர்.
நிலைப் பொங்கல்: இந்நாளில் தென்மாவட்ட மக்கள் தங்கள் வீட்டின் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு கரும்பினை சாத்தி நிலைப் பொங்கல் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பொங்கல் பொங்கியதும் பழம், வெற்றிலை பாக்கு, போன்றைவற்றை படைத்து தேங்காய் உடைத்து வழிபடுவர். இவ்வாறு செய்வதன் நோக்கம் நம் இல்லத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களை வணங்குவதாகும். அந்த தெய்வங்கள் நம் முன்னோர்களாகவோ அல்லது குல தெய்வமாக இருக்கலாம்.
காப்பு கட்டுதல்: இன்று மாலை வீட்டின் நிலை வாசலுக்கு மேல் காப்பு கட்டுவார்கள். காப்புக்கட்டு என்பது ஆவாரம்பூ, மாவிலை, தும்பை, கூரைப்பூ, வேப்பிலை ஆகியவற்றை கொண்டிருக்கும். இதை கட்டுவதன் மூலம் விஷப்பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பு, மற்றும் ஆரோக்கியம் ஏற்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். மாவிலை காற்றினை சுத்தப்படுத்தும், ஆவாரம்பூ சர்க்கரை மற்றும் தோல் வியாதிகளுக்கு நல்லது. கூரைப்பூ விஷப்பூச்சிகள் வருவதை தடுப்பதுடன் விஷக்கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. தும்பை காலைநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களை குணமாக்குகிறது.
புகையில்லா போகி: போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரிக்கும் பழக்கத்தை பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றனர். இது கிராமங்களுக்கு ஒத்து வரும் நிலையில் நகரங்களில் வாழும் மக்களும் பழைய பொருட்களை எரிக்கும் போது புகை மூலமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அதனால் புகையில்லா போகியை கொண்டாடும்படி மக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது.