பதிவு செய்த நாள்
14
ஜன
2024
01:01
கடந்த மாதம் 26ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் பற்றி முதல் முறையாக பத்திரிகையாளர்களுக்கு விளக்குவதற்கான கூட்டம் நடைபெற்றது. இதற்காக குழுமியிருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் இரண்டு விஷயங்களால் வியந்து போயினர். முதல் விஷயம், கற்பனைக்கு அப்பாற்பட்டு கண்முன் பரந்து விரிந்து காணப்பட்ட அயோத்தி ராமர் கோவில்.
இரண்டாவதாக, அனைவரையும் வியக்கவைத்தவர், எவ்வித குறிப்பும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு ராமர் கோவில் குறித்து விளக்கம் தந்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய். தற்போது 78 வயதாகும் சம்பத் ராய், சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ்., தொண்டர். உ.பி., பிஜ்னோரின் நாகினாவின் மொஹல்லா சரைமிர் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவர். வேதியில் பேராசிரியராக இருந்தவரை, முழு நேர வி.எச்.பி.,தொண்டராக்கியது எமர்ஜென்சி தான்.
எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டு, 18 மாதங்கள் பல்வேறு சிறைகளில் சொல்ல முடியாத சித்ரவதைகளுக்கு உள்ளானவர், வெளியே வரும்போது இரும்பு மனிதரானார். இனி தன் உடல், பொருள், ஆவி அனைத்தும், தான் சார்ந்த அமைப்பிற்கே என, முடிவு செய்தார். அந்த நேரம் அயோத்தி ராமர் கோவில் பிரச்னை பெரிதாக எழ, கோவில் சார்பாக ஆவணங்கள் சேகரிப்பதிலும், அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளிலும் முழு கவனம் செலுத்தினார். இவரது அயராத ஆர்வம் காரணமாக, ராமர் கோவில் கட்டுமான தலைமை மேற்பார்வையாளரானார். இப்போது நாம் பேசும் ராமர் கோவில், இரண்டு ஆண்டுகளில் உருவானது அல்ல. இதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த உழைத்தவர். பக்தர்களிடம் நன்கொடையாக பணமாகவும், பொருளாகவும் ராமர் கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்தவர்.
ராமர் கோவிலுக்கு என தனி அலுவலகம் துவங்கி கட்டுமானப் பணிகளை நடத்தியவர். ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்களை கொண்டு வந்து, கைதேர்ந்த சிற்பிகள் வாயிலாக துாண்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தார். பலரும் எந்த நம்பிக்கையில் இவ்வளவு தீவிரமாக கோவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளீர்கள் என்று கேட்ட போது, எல்லாம் ராமர் மீதான நம்பிக்கையில்தான் என்பார். இதோ, இப்போது அவரது உழைப்பு, எண்ணம், நம்பிக்கைக்கு உயிர்வந்துவிட்டது. மொத்த அயோத்திக்கே உயிர்ப்பு வந்துவிட்டது. கேள்விகளாலும், விமர்சனங்களாலும் தளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, கோவில் கட்டுமானப்பணியை எடுத்துக் கொண்ட பின், பல ஆண்டுகளாக விளம்பர வெளிச்சத்திற்கே வரவில்லை; அதாவது எந்தச் செய்தியிலும், எந்தப் பேட்டியிலும் பங்கேற்கவில்லை. கவனம் முழுவதையும் கோவில் கட்டுமானப் பணியிலேயே செலுத்தினார். தான் என்ன செய்யவேண்டும் என்பது தனக்கும், ராமருக்கும் தெரிந்தால் போதும் என்று கடமையே கண்ணாக இருந்தார். அவர் மனதில் இருந்தது எல்லாம் பிரமாண்ட ராமர் கோவிலும், அதில் பிராண பிரதிஷ்டை செய்யப்போகும் குழந்தை ராமர் விக்ரகமும் தான். இதற்கான தீர்ப்பு வந்ததும், இதற்காகவே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள சம்பத் ராயிடம் முழுப்பொறுப்பும் வழங்கப்பட்டது.
நோக்கமும், லட்சியமும் தீர்க்கமாக இருக்குமானால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கு சம்பத் ராயே ஒரு உதாரணம். நீண்ட நாட்களுக்கு பின் அல்ல; நீண்ட ஆண்டுகளுக்கு பின் ராமர் கோவில் கனவு எப்படி நனவாகியது என்பதை இரண்டு மணி நேரம் ஹிந்தியில் சொற்பொழிவு போல நிகழ்த்தினார். அவரது பேச்சில் யாரையும் காயப்படுத்தவில்லை; யாரையும் குறைகூறவில்லை. பல ஆண்டுகளாக மனதிற்குள் இது இப்படித்தான் வரவேண்டும் என்று தீட்டிய திட்டங்கள் என்பதால் தடையேதுமில்லாமல் அனைத்து பணிகளும் இனிதாக நடக்கின்றன. கும்பாபிஷேக நாள் நெருங்க நெருங்க இன்னும் இளமையாக, இன்னும் குதுாகலமாக ஓடிக் கொண்டிருக்கிறார் சம்பத் ராய்.