பதிவு செய்த நாள்
14
ஜன
2024
07:01
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ல் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள 55 நாடுகளை சேர்ந்த 100 பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக உலக ஹிந்து பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனரும், சர்வதேச தலைவருமான சுவாமி விக்யானந்த் கூறியதாவது: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்க்க 55 நாடுகளை சேர்ந்த தூதர்கள், எம்.பி.,க்கள் என 100 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. கொரியா அரசிற்கும் அழைப்பு அனுப்பி உள்ளோம்.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெலாரஸ், போட்ஸ்வானா, கனடா, கொலம்பியா, டென்மார்க், டோமினிகா, காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கானா, கயானா, ஹாங்காங், ஹங்கேரி, இந்தோனேஷியா, அயர்லாந்து, இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், கென்யா, கொரியா, மலேஷியா, மலாவி, மொரிஷியஸ், மெக்சிகோ, மியான்மர், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, சியாரா லியோன், சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா,ஸ்பெயின், இலங்கை, சூரினாம், சுவீடன், தைவான், தன்சானியா, தாய்லந்து, டிரினிடாட் , மேற்கு இந்திய தீவு, உகாண்டா, பிரிட்டன், அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
அனைத்து வெளிநாட்டு விவிஐபி பிரதிநிதிகளும் லக்னோவுக்கு வரும் 20ம் தேதி வருவார்கள். 21ம் தேதி மாலை அயோத்திக்கு செல்வார்கள். பனி மற்றம் வானிலை காரணமாக, முன்னதாகவே வருமாறு வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதிகமானவர்களை கும்பாபிஷேகத்திற்கு அழைக்க நினைத்தோம். ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக அந்த முடிவு மாற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.