பதிவு செய்த நாள்
21
ஜன
2024
07:01
பல நுாற்றாண்டு எதிர்பார்ப்பு, பல தலைமுறை போராட்டங்கள், நம் முன்னோர்களின் சபதங்கள் நிறைவேறும் நாள் வந்துவிட்டது. சனாதன தர்மத்தின் ஆன்மாவான, ரகுநந்தன் ராகவ ராம லல்லா, அவர் பிறந்த அவத்புரியில் மிக பிரமாண்டமான, புனிதமான கோவிலில் இருந்து ஆட்சி புரிய உள்ளார்.
கடந்த, 500 ஆண்டுகளாக காத்திருந்த இந்த வரலாற்று மற்றும் புனிதமான நாள், நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை, அனைத்து சாலைகளும் ஸ்ரீ ராம ஜென்மபூமியை நோக்கியே இருக்கும்.
அனைத்து கண்களும் மகிழ்ச்சியிலும், திருப்தியிலும் பனிக்கும். அனைவரும், ராம், ராம் என்று கோஷமிட உள்ளனர்.
மக்களின் நம்பிக்கை
இந்த, 2024, ஜன., 22ம் தேதி, குழந்தை வடிவிலான ராம் லல்லாவின் விக்ரகம் பிரதிஷ்டை நடக்கும் நாள் மட்டும் அல்ல; இது நாட்டு மக்களின் நம்பிக்கை மீண்டும் நிலைநிறுத்தப்படும் நாளாகும்.
அயோத்தி, தன் பழைய பொலிவுக்கு திரும்ப உள்ளது. நீதி மற்றும் உண்மையின் இந்த ஒருங்கிணைந்த வெற்றி, பழைய கசப்பான உணர்வுகளை அழித்து, புதிய மகிழ்ச்சியையும், சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த உள்ளது.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி முக்தி மகாயக்னம், சனாதன நம்பிக்கைக்கான ஒரு பரிசோதனை மட்டுமல்ல. அது நம் நாட்டின் ஒருங்கிணைந்த ஆன்மாவை துாண்டிவிட்டுள்ளது.
ஒற்றுமை என்ற இழையால் நம் நாட்டை ஒருமைப்படுத்தியுள்ளது. இந்த ஒற்றுமையுணர்வு, ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான கோவில் கட்டுவதை உறுதியாக்கியுள்ளதை எதனுடனும் ஒப்பிட முடியாது.
சன்னியாசிகள், மேதைகள், அரசியல்வாதிகள், அனைத்து தரப்பு மக்கள் என, அனைவரையும் ஒரே பாதையில் அழைத்துச் சென்றது. ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., போன்ற சமூக கலாசார அமைப்புகள், இதற்கான பாதையை உருவாக்கி, மக்களை ஒருங்கிணைத்தது. நம் அனைவரின் தீர்மானங்களும் நிறைவேறி, இந்தியா நாளை புதிய உதயத்தை பார்க்கப் போகிறது.
பூலோக வைகுண்டம், அவனியின் அமராவதி என்று அழைக்கப்பட்ட அயோத்தி, பல நுாற்றாண்டுகளாக சபிக்கப்பட்டிருந்தது. ராம ராஜ்ஜியம் நிலைநாட்டப்பட்ட இந்த நிலத்தில், ராமர் இருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது.
வாழ்த்து
ஆனால், ஒழுக்கம், சுயக்கட்டுப்பாட்டை தன் வாழ்க்கையின் வாயிலாக நமக்கு கொடுத்தவர் ராமர். அதனால்தான், ராம பக்தர்கள், அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும், ஒவ்வொரு நாளும் தங்களுடைய உறுதியை, பொறுமையாக வலுப்படுத்தி வந்தனர்.
தற்போது அயோத்தி மீண்டும் அதன் பழைய பொலிவை பெற்றுள்ளது; நாட்டு மக்களிடையே மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடிக்கணக்கான ராம பக்தர்கள், நம் முன்னோர்களின் சபதத்தை, உறுதியை நிறைவேற்றுவதற்கு வழிகாட்டியாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த நேரத்தில் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில் இந்த நாள், என் வாழ்க்கையில் சிறப்பானதாகும். ராம ஜென்மபூமி விடுதலை பெற்று, அங்கு ராமருக்கு கோவில் அமைய வேண்டும் என்பதற்காக, என்னுடைய முன்னோர்கள், என்னுடைய குருக்கள் மேற்கொண்ட முயற்சிகள் எனக்குள்ளும் விதைக்கப்பட்டது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மிகப் பெரும் பாக்கியமாகும். ராமர் கோவில் கட்டுமானம் துவங்கி, ராம் லல்லா பிரதிஷ்டை நடக்கப் போகிறது என்பதை அறிந்ததும், சனாதனத்தில் நம்பிக்கையுள்ள அனைவரின் உள்ளங்களும் பெருமையால் கொப்பளித்தது.
ஆன்மிக முறை
தற்போது நாடு முழுதும் காணப்படும் எழுச்சியும், மகிழ்ச்சியும், பல நுாற்றாண்டுகளில் காணப்படாத ஒன்று.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில், நாடு முழுதும் உள்ள, 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய ஆன்மிக முறைகளைப் பின்பற்றும் சன்னியாசிகள், மதத் தலைவர்களுடன், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் என, 50க்கும் மேற்பட்ட சமூகத்தவர் பங்கேற்க உள்ளனர்.
அரசியல், அறிவியல், தொழில், விளையாட்டு, கலை, கலாசாரம், இலக்கியம் என, பலதரப்பட்ட துறைகளின் முன்னோடிகளும் பங்கேற்க உள்ளனர்.
அயோத்திதாம், ஒரு மினி இந்தியா என்பதை உணர்த்தும் வகையில், நாட்டின், 140 கோடி மக்களின் சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்த நேரத்தில், மனமெங்கும் பூரிப்பும், மகிழ்ச்சியும், பெருமையும் கொப்பளிக்கும், 25 கோடி உத்தர பிரதேசவாசிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
பிராண பிரதிஷ்டைக்குப் பின், நம் நாடு மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும், பக்தர்கள், சுற்றுலா பயணியர், ஆர்வலர்களை வரவேற்பதற்காக அயோத்தி காத்திருக்கிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்கு பார்வையால், அயோத்தி மாறியுள்ளது.
சர்வதேச விமான நிலையம், விரிவுபடுத்தப்பட்ட ரயில் நிலையம், 4 - 6 வழிச் சாலைகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என, பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நவீனத்துடன், பாரம்பரியமும் இங்கு இழைக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் கும்பாபிஷேகம், ஒரு ஆன்மிக விழா மட்டுமல்ல. நம் நாட்டின் கலாசாரத்தை புதுப்பிக்கும், தேசிய கோவிலாகும்.
ராமபிரானின் ஆசியுடன், மக்களின் பங்களிப்புடன், இனி இங்கு குண்டுகள் சத்தம் கேட்காது; சரயு நதியில் ரத்தம் ஓடாது. இனி எங்கும், ராம நாம் சங்கீர்த்தனங்களே ஒலிக்கும்.
அவத்புரியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், நம் நாட்டில் ராமராஜ்ஜியம் மீண்டும் நிறுவுவதற்கான ஒரு துவக்கமாக அமையும்; அதை சாத்தியமாக்கும்.
இந்தக் கோவிலில் இடம்பெறும் பால ராமர், நம்மை வழிநடத்தும் விளக்காக இருந்து, சனாதனத்தைப் பின்பற்றும், அதில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வழிகாட்டுவார். அனைவரின் வாழ்க்கையும் பிரகாசமாக அமைய, ராமரின் ஆசி அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
ஸ்ரீ ராமனே என் அடைக்கலம்; ஜெய் ஜெய் ஸ்ரீ சீதாராமா.
- யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச முதல்வர்.