பதிவு செய்த நாள்
21
ஜன
2024
07:01
அயோத்தி ; நாளை கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில் அலங்கார விளக்கொளியில் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோவில்
கடந்த 500 ஆண்டுகளாக நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பல நுாற்றாண்டு எதிர்பார்ப்பு, பல தலைமுறை போராட்டங்கள், நம் முன்னோர்களின் சபதங்கள் நிறைவேறும் நாள் வந்துவிட்டது. சனாதன தர்மத்தின் ஆன்மாவான, ரகுநந்தன் ராகவ ராம லல்லா, பிறந்த அவத்புரியில் மிக பிரமாண்டமான, புனிதமான கோவிலில் இருந்து ஆட்சி புரிய உள்ளார். கடந்த, 500 ஆண்டுகளாக காத்திருந்த இந்த வரலாற்று மற்றும் புனிதமான நாள், நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை, அனைத்து சாலைகளும் ஸ்ரீ ராம ஜென்மபூமியை நோக்கியே இருக்கும். அனைத்து கண்களும் மகிழ்ச்சியில் அயோத்தியை நோக்கயே உள்ளது.
அயோத்தி, தன் பழைய பொலிவுக்கு திரும்ப உள்ளது. நீதி மற்றும் உண்மையின் இந்த ஒருங்கிணைந்த வெற்றி, பழைய கசப்பான உணர்வுகளை அழித்து, புதிய மகிழ்ச்சியையும், சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த உள்ளது. பிராண பிரதிஷ்டைக்குப் பின், நம் நாடு மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும், பக்தர்கள், சுற்றுலா பயணியர், ஆர்வலர்களை வரவேற்பதற்காக அயோத்தி காத்திருக்கிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்கு பார்வையால், அயோத்தி மாறியுள்ளது. சிறப்பு மிக்க அயோத்தி ராமர் குழந்தை முகம் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு நாளை 22ம் தேதி மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் பூஜைகள் நடைபெறுகிறது.