சாஸ்திர விரோதமாக யார் நடந்தாலும், பேசினாலும் ராமனுக்குப் பிடிக்காது. மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட இரக்கம் கொண்டு, ‘இன்று போய் நாளை வா’ என்றவரையே கோபத்திற்கு உள்ளாக்கினார் ஜாபாலி ரிஷி. ‘‘ராமா! மறைந்த பெற்றோருக்கு இங்கிருந்து பிண்டம் கொடுப்பது அவர்களைப் போய்ச் சேரும் என்கிறாயே! அதெப்படி சாத்தியம்? அப்படி போனதை யாரும் பார்த்ததுண்டா? மறைந்த பிறகு தந்தையாவது, மகனாவது...” என்றார் ஜாபாலி ரிஷி. இதைக் கேட்டதும் ராமனின் கண்கள் சிவந்தன. ‘‘மகரிஷியே! என்ன சொல்கிறீர்கள்? சாஸ்திரத்திற்கு விரோதமாக பேசாதீர்கள். வேதத்தில் இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வேதமே அல்லவா தவறாகி விடும்! எல்லாவற்றுக்கும் அச்சாரம் வேதம்” என கோபித்தார். ஜாபாலி ரிஷி நடுங்கி விட்டார். ‘‘அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆனால் உன் வாயால் இந்த வார்த்தைகள் தெளிவாக வரட்டுமே என்று தான் கோபமூட்டினேன்.” என்ற பின்னரே ராமன் சமாதானம் அடைந்தார்.