புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2024 02:01
மயிலாடுதுறை; சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நாள்தோறும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். புற்றடி மாரியம்மனை மனம் உருக பிராத்தித்தால் சகல பாக்கியமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் தை முதல் வெள்ளிக்கிழமை காப்பு கட்டப்பட்டு கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கி நடைபெறும். இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று தீமிதி உற்சவமும் அதனை முன்னிட்டு காலையில் தேர் திருவிழாவும் தொடர்ந்து பக்தர்கள் அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து புற்றடி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இவ்வாண்டு தீமிதி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது இரண்டாவது வெள்ளியான இன்று மாலை தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை தேர் திருவிழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு இட்டு வழிபாடு நடத்தினர்.