பதிவு செய்த நாள்
25
அக்
2012
10:10
கோவை: விஜயதசமி தினமான நேற்று, கோவையிலுள்ள பல்வேறு கோவில்களில், எழுத்தாணிப்பால் விழா(வித்யாரம்பம்) நடந்தது. நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமியில், குழந்தைகள் நன்கு படித்து, கலை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டி, நோட்டு புத்தகங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நாளில்,எழுத்தாணிப்பால் விழா எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவில்களில், நடத்தப்படுகின்றன. தேன் தடவிய தங்கம் அல்லது வெள்ளி கம்பியை கொண்டு குழந்தைகளின் நாவில் ஓம் என எழுதி, மடியில் அமர வைத்து பச்சரிசி பரப்பிய ஒரு தட்டில் குழந்தையின் கையில் ஒரு மஞ்சள்துண்டு கொடுத்து, கையை பிடித்து ஓம் ஹரி; ஸ்ரீ கணபதியே நமஹ என, அகர வரிசையில் எழுதவும், உச்சரிக்கவும் நிகழ்ச்சியில், கற்றுத்தரப்படும்.ராஜவீதி - உப்பார வீதி சந்திப்பிலுள்ள, பேட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் எழுத்தாணிப்பால் விழா நேற்று நடந்தது. பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நால்வர் பெருமக்கள் வழிபாடு, குரு வழிபாடு, கலைமகள் வழிபாடு நடந்தது. திருவாசக பாடல்களை பாட, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. நியூ சித்தாபுதூரிலுள்ள ஐயப்பன் சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில், நேற்று நடந்த எழுத்தாணிப்பால் விழாவில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பங்கேற்றனர்.