பதிவு செய்த நாள்
25
அக்
2012
10:10
பொள்ளாச்சி: நவராத்திரியை ஒட்டி, பொள்ளாச்சி அருகே அம்மன் கோவிலில், உடலில், "கத்தி போடும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், நெகமத்தில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இங்கு, நவராத்திரி விழா, அக்., 15ல் துவங்கியது. கடந்த, 19ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடும், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயத பூஜையும் நடந்தது. விஜயதசமி தினமான நேற்று காலை, 9:00 மணிக்கு, விநாயகர் கோவிலில் அலகு சேர்வை செய்து, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அங்கிருந்து, சக்தி அழைத்து வரப்பட்டது; உடன், மாவிளக்கு மற்றும் முளைப்பாரி ஏந்தி பக்தர்கள் வந்தனர். இதன் பிறகு, பக்தர்கள், "கத்தி போடும் நிகழ்ச்சி, காலை 11:30 மணியளவில் துவங்கியது. இதில் பங்கேற்றவர்கள், வேசுக்கோ தீசுக்கோ என்ற முழக்கமிட்டவாறு, இரு கத்திகளை கொண்டு கைகளை கீறிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு களித்தனர். பிற்பகல், 1:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், சவுடாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.