பதிவு செய்த நாள்
02
பிப்
2024
11:02
திருப்பூர் : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது; நாயனாரால், முதலை விழுங்கி குழந்தையை, தேவாரம் பாடி மீட்டெழ வைத்த அற்புதம் நிகழ்ந்த திருத்தலம்; கோவிலில், இன்று காலை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா, கடந்த 24ம் தேதி விநாயகருக்கு வேள்வியோடு துவங்கியது. மொத்தம், எட்டு கால யாக பூஜையில், இன்று காலை, எட்டாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. அதன்பின், அவிநாசியப்பர், பெருங்கருணாம்பிகை அம்மன், சுப்ரமணிய பெருமான் ஆகிய மூலவர் சன்னதி, விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு நாளை, காலை, 9:15 முதல் 10:15 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், ஆதினங்கள், சிவாச்சார்யார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி, அவிநாசி விழாக்கோலம் பூண்டுள்ளது.
1,000 போலீசார் பாதுகாப்பு; கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள், போக்குவரத்து மாற்றம் போன்றவற்றை செய்துள்ளனர். பாதுகாப்பு பணியில், மாநகரம், மாவட்ட போலீசார் என, ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.