பதிவு செய்த நாள்
25
அக்
2012
10:10
ராசிபுரம்: மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், ஐப்பசி மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம், பூச்சாட்டுதலுடன் துவங்கியது.கைலாசநாதர் கோவிலில் இருந்து, மாரியம்மன் ஸ்வாமி சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று செல்லாண்டியம்மன், பட்டதுளசி அம்மன் சென்று பூச்சாட்டி, பின்னர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த மலர்களை, அம்மன் மீது தூவி பூச்சாட்டினர்.அதை தொடர்ந்து, ஸ்வாமி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (அக்., 25) கம்பம் நடும் விழா நடக்கிறது. தினமும் ஸ்வாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நவம்பர், 5ம் தேதி, இரவு பூவோடு பற்றி வைத்தல், 6ம் தேதி அதிகாலை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.