பதிவு செய்த நாள்
25
அக்
2012
10:10
திருச்சி: நவராத்திரி உற்சவத்தின், 10வது நாளான, விஜயதசமியான நேற்று, சைவ, வைணவ கோவில்களில் அம்பு போடும் வைபவம் கோலாகலமாக நடந்தது. துர்க்கையாக அவதாரம் எடுத்த அம்மன், ஒன்பது நாட்கள் தொடர்ந்து கொலுவிருந்து, மகிஷாசுரமர்த்தன் என்ற அசுரனை வதம் செய்தாள். வெற்றியை கொண்டாடும் விதமாக, 10 நாளான நேற்று விஜயதசமி விழாவாக கொண்டாடப்பட்டது. "விஜயதசமியன்று துவங்கும் காரியங்கள் ஜெயமாகும் என்பதால், கல்வியை துவங்கும் குழந்தைகள், நெல்மணியில் "அ என்ற தமிழ் முதலெழுத்தை பள்ளி, கோவில்களில் எழுதும் "வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அம்பு போடுதல்: விஜயதசமியன்று சைவ, வைணவ கோவில்களில் அம்பு போடும் வைபவம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீரங்கம் மூலஸ்தானத்தில் இருந்து தங்கக்குதிரையில் புறப்பாடான நம்பெருமாள், திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர் கோவில் வன்னி மரத்தடியில் எழுந்தருளி, அம்பு போடும் வைபவத்தை நிகழ்த்தினார். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் நவராத்திரி கலைநிகழ்ச்சி மண்டபம் அருகே, அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளி, அம்புபோட்டார். இதேபோல, சமயபுரம் மாரியம்மன், உறையூர் வெக்காளியம்மன், பஞ்சவர்ண ஸ்வாமி கோவில்களில், குதிரையில் அம்மன் புறப்பாடாகி அம்பு போடும் வைபவம் நடந்தது.