பதிவு செய்த நாள்
25
அக்
2012
10:10
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் பாணாசூரனை வதம் செய்யும் நவராத்திரி பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா, அம்பாள் கொலுமண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் கடந்த 15ம்தேதி கோலாகலமாக துவங்கியது. நவராத்திரி விழாவின் முக்கிய நாளான விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நேற்று அம்பாள் பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை யொட்டி நேற்று அதிகாலை 4.30க்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து, தேவி அலங்கார மண்டபத்தில் வெள்ளிகுதிரை வாகனத்தில் எழுந்தருளல், அன்னதானம் நடந்தது. பின்னர் அம்பாள் மலர்மாலை, எழுமிச்சை பழ மாலைகள், சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கு முன் செல்ல வெள்ளிகுதிரை வாகனத்தில் திருக்கோயிலை வலம் வந்த அம்பாள் பரிவேட்டைக்கு புறப்பட்டார். அமைச்சர் பச்சைமால், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளிகுதிரை வாகனம் செல்ல, ஸ்ரீதேவி பக்தர்கள் சங்கம் சார்பில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்சவாத்தியம், தையல் ஆட்டம், செண்டைமேளம், பஜனை போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் அம்பாள் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம் பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக பரிவேட்டை நடக்கும் வேட்டை மண்டபம் வந்தடைந்தார். அம்பாள் வெள்ளிகுதிரையில் வரும் வழிகளில் சாலையின் இருபுறமும், ஏராளமான பக்தர்கள் சுருள் மற்றும் காணிக்கை வைத்து வழிபட்டனர். மாலை 6.30க்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை வந்தடைந்த அம்பாள் 3 முறை குதிரை வாகனத்தில் வலம் வந்து நான்கு திசைகளிலும் அம்பு எய்து, பின்னர் இளநீரில், பாணாசூரன் என்ற அரக்கன் இருப்பதாக அம்பு எய்து வதம் செய்தார். பின்னர் அங்கிருந்து மகாதானபுரம் கிராமம், பஞ்சலிங்கபுரம் ஆகிய இடங்களுக்கு பல்லக்கு வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் அம்பாள் திருக்கோயிலை நோக்கி புறப்பட்டு இரவு 12 மணிக்கு கோயில் கிழக்கு வாசல் எதிரே உள்ள ஆராட்டு மண்டபம் வழியே சென்று கடலில் நீராடிய பின்னர் கோயிலுக்கு சென்றதைத் தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. படகுசேவை ரத்து: பரிவேட்டையை முன்னிட்டு நேற்று காலை 8 மணி முதல் 12 மணிவரை சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகுசேவை நடந்தது. அதன்பின் 12 மணி முதல் மாலை 4 மணிவரை படகுசேவை ரத்து செய்யப்பட்டது. போலீஸ் அணிவகுப்பு மரியாதை இல்லை: பக்தர்கள் அதிர்ச்சிநவராத்திரி பரிவேட்டைக்கு அம்பாள் வெள்ளிகுதிரை வாகனத்தில் எழுந்தருளும் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் அம்பாளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். பல ஆண்டு காலம் நடந்து வந்த இந்த மரியாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பச்சைமாலிடம் விடுத்த கோரிக்கையடுத்து கடந்த ஆண்டு போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அம்பாள் பரிவேட்டைக்கு எழுந்தருளும் போது போலீஸ் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்படாதது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.