பதிவு செய்த நாள்
25
அக்
2012
02:10
நகரி: பிரசித்த பெற்ற காளஹஸ்தி சிவன் கோவிலில், விமான கோபுரத்திலிருந்து கற்கள் இடிந்து விழுந்தது. சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர சுவாமி(காளத்தியப்பர்) கோவிலில், ஞானபிரசூனாம்பிகை தாயார் சன்னதி விமான கோபுரத்தில், மூன்று கலசம் அமைந்து உள்ளது. இந்த கலசம் அருகே, கற்கள் திடீரென இடிந்து கீழே சரிந்தது. கடந்த நான்கு தினங்களாக காளஹஸ்தி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் விமான கோபுரத்தின் மீது தண்ணீர் இறங்கியதால், கலசத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, கற்கள் இடிந்து விழுந்து உள்ளது. அப்போது, பக்தர்கள் யாரும் அருகில் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள், இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாயார் சன்னதி விமான கோபுரத்தின் மீது உள்ள கலசங்கள் அருகே செடிகள் முளைத்துள்ளன. இதை அகற்றி, பராமரிக்க தவறியதால் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. விமான கோபுரத்தை உடனடியாக பழுது பார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கோவில் அதிகாரி தெரிவித்தார். கோவில் வளாகத்தில், குருதட்சணாமூர்த்தி கோவில் அருகிலும் சில தினங்களுக்கு முன்பு கற்கள் பெயர்ந்து விழுந்து உள்ளதாக கூறப்படுகிறது.
காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்து தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும், கோவில் முகத்துவார கோபுரத்தில் கலசம் ஒன்று சரிந்து விழுந்தது. தற்போது, தாயார் சன்னதி விமான கோபுரத்தில் கற்கள் சரிந்து விழுந்து உள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.