பதிவு செய்த நாள்
07
பிப்
2024
02:02
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி மாரியம்மன் கோவிலில், கோமாளி ரங்கன் பாதயாத்திரை தொடக்க விழா நடந்தது.
வீரபாண்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீராமர் பஜனை குழுவினர், ஒன்னிபாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கோமாளி அரங்கன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபாடு மற்றும் பஜனை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். தற்போது, 38ம் ஆண்டு பாதயாத்திரை தொடக்க விழா, வீரபாண்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.
முதலில் விநாயகர் வழிபாடு, வேள்வி வழிபாடுடன் திருமாலை அணிதல் நிகழ்வு நடந்தது. இதில், ஸ்ரீராமர் பஜனை குழு உறுப்பினர்கள் மாலை அணிந்து, தங்கள் விரதத்தை தொடங்கினர். இதையடுத்து, அருள் தரும் வீரபாண்டி மாரியம்மனுக்கு தீர்த்த கலச அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒரு வார காலம் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. பின்னர் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை, 8:00 மணிக்கு கோவிலிலிருந்து தீர்த்த கலசங்கள் மற்றும் ஸ்ரீ ராமரின் திருவுருவ படத்துடன் திருவீதி உலா பாதயாத்திரை தொடங்குகிறது. குழுவினருக்கு சாமநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில், காளிபாளையம் ஸ்ரீ திருமலைராய பெருமாள் திருக்கோவில், ஒன்னிபாளையம் விநாயகர் திருக்கோவில்களில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட உள்ளன. மதியம்,1:00 மணிக்கு ஸ்ரீ கோமாளி அரங்கனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், அன்னதானம் நடைபெற உள்ளன. கோவில் வளாகத்தில் மாலை, 4:00 மணி வரை, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஜனை குழுவினர், பஜனைகளை நடத்த உள்ளனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ராமர் பஜனை குழுவினர் செய்து வருகின்றனர்.