அவிநாசி லிங்கேஸ்வரர் மண்டல பூஜை; அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2024 02:02
அவிநாசி; காசியில் வாசி அவிநாசி என புகழ்மிக்க தலமாக விளங்கும் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த 2ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெறுகின்றது. இதில் முதல் இரண்டு நாட்கள் மண்டல பூஜைகளின் போது பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கோவில் வளாகத்தில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் மங்கலம் சாலை வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுமார் 4 முதல் 5 மணி நேரம் கடும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் பக்தர்கள் இறைவனை காண பொறுமையுடன் காத்து நின்றனர். கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அறநிலையத்துறை சார்பில் கோவில் வளாகத்திலும், உள் பிரகாரத்திலும் குடிநீர் வசதி கூட ஏற்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில் பக்தர்கள் அறநிலையத்துறை அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவிட்டதைத் தொடர்ந்து ஒரு சில இடங்களில் தண்ணீர் கேன் வைக்கப்பட்டது. மேலும் யாகசாலை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பக்தர்கள் வரிசையில் நின்று செல்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதன் மூலம் ஓரளவு பக்தர்கள் வெயிலில் வாடாமல் நிழலில் நின்று தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்கிடையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து கொண்டிருக்கும் வேளையில், இன்று அறநிலையத்துறை சார்பில் கோவில் முன் பிரகாரத்தில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ.50 என போர்டு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதில் பக்தர்கள் கோவில் முன் வளாகத்தில் நீண்ட வரிசையில் வெயிலில் காத்து நின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், மண்டல பூஜைகள் நடைபெறும் 48 நாட்களுக்கு வாகனங்கள் உள்ளே அனுமதிக்காமல் கும்பாபிஷேக விழாவின்போது வாகனம் நிறுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட இடத்திலேயே, நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்கு கோவில் முன்பகுதியில் நிழல் தரும் ஷெட் அமைக்கப்படும் என தெரிவித்ததாக தகவல் கேள்விப்பட்டோம். ஆனால் இரண்டு நாட்கள் கடந்தும் அறநிலையத்துறை சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பக்தர்களிடம் வசூல் வேட்டை செய்வதிலேயே, குறியாக உள்ளது என பக்தர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார். கோவில் வளாகத்தில் ஏற்படும் வாகன நெருக்கடியால் பக்தர்கள் உள்ளே நுழைய முடியாமல் கடும் சிரமத்தில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியனிடம் கேட்டபோது, இன்று முதல் சிறப்பு தரிசனம் செய்வதற்கு அறநிலையத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் நிழலில் நிற்பதற்காக உடனடியாக முன்பகுதியில் செட் அமைக்கப்படும். மேலும் வாகனங்களை இன்று முதலே மாற்று இடத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.