சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக்கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசிவேண்டியும் சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக்கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர். சிரார்த்தம் கொடுக்கும்போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும்போது தானே நிச்சயம் சிரத்தை (அக்கறை) உண்டாகும். கலியுகத்தில் ஜம்புத்தீவில் பரதகண்டத்தில், ....ஆண்டில்..... அயனத்தில்... ருதுவில்.... மாதத்தில்... பட்சத்தில்... திதியில்.... வாரத்தில்.... நட்சத்திரத்தில் எனது பெற்றோரான ... பெயர் கொண்டவருக்கு சிவயோக பிராப்தம் சித்திப்பதன் பொருட்டு, அவரது பிள்ளையாகிய நான் இந்த சிராத்தத்தை செய்கின்றேன். இதனை ஏற்றுக் கொண்டு ஆசியளிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன் என்பதே சிரார்த்தமந்திரம். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும்.