பதிவு செய்த நாள்
25
அக்
2012
04:10
இல்லறமல்லது நல்லறமன்று என்பது அவ்வையின் வாக்கு. உலகில் எந்த நாட்டிற்கும் இல்லாத பெருமை நமக்கு உண்டு. அது தான் குடும்பம் என்ற அமைப்பு. சுனாமியின் போது உதவி செய்வதற்காக வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் மனைவி ஹிலாரியும் வந்திருந்தார். அப்போது ஹிலாரியிடம், இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்க, இந்தியா கோயில்கள் நிறைந்த நாடு என்பதை அறிவேன். ஆனால், இங்கு குடும்பங்களே கோயில்களாக உள்ளன. அதில் மனைவியே தெய்வமாகத் திகழ்கிறாள் என்பது இங்கு வந்தபின்பு தான் தெரிகிறது, என்றார். நம்நாட்டைப் பொறுத்தவரை குடும்பவாழ்வு தொடங்குவதே திருமணத்தின் மூலம் தான். பத்து பொருத்தம் பார்த்து, பஞ்சபூதங்கள் சாட்சியாக, நான்கு வேதம் முழங்க, மூன்றுமுடிச்சு போட்டு, இருமனங்கள் ஒன்றாக இணைவது தான் திருமணம். நல்ல சமையல் ஒருநாள் இன்பம், நல்ல அறுவடை ஓராண்டு இன்பம். நல்ல திருமணமோ காலமெல்லாம் இன்பம்.
தெய்வீகத்திருமணத்தைக் கூட வள்ளி திருமணம் என்று சொல்வார்களே தவிர, முருகன் திருமணம் என்று சொல்வதில்லை. இதைப்போலவே சீதாகல்யாணம், மீனாட்சி திருக்கல்யாணம் என்று சொல்வது மரபு. பெண்மையைப் போற்றுவது தான் இதன் அடிப்படை. மலரின் நறுமணம் போல, பெண்களும் அன்பு என்னும் மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். பெண்ணுக்கு கண் அவர் என்பதே கணவரானது. கண்ணை இமை காப்பது போல குடும்பத்தைக் காப்பவள் மனைவி.(கீழ் இமை அசையாது). இரண்டு கண்களும் ஒரே பொருளையே காண்பது போல, கணவனும் மனைவியும் கருத்து ஒன்றி நற்செயல்களைச் செய்யவேண்டும், என நன்னெறி வெண்பா நாற்பது என்னும் நூலில் சிவப்பிரகாசசுவாமிகள் குறிப்பிடுகிறார்.
சிவகுரு- ஆர்யாம்பாள் தெய்வீகத் தம்பதிகள் திருச்சூர் விருஷாசலம் கோயிலில் குழந்தை வரம் வேண்டி விரதமிருந்தனர். அன்றிரவு கோயிலில் உறங்கும்போது ஆர்யாம்பாளின் கனவில் தோன்றிய சிவன், அற்பாயுள் வாழும் நல்ல பிள்ளை வேண்டுமா? தீர்க்காயுள் உள்ள கெட்டபிள்ளை வேண்டுமா? என்று கேட்டார். சிவனிடம் ஆர்யாம்பாள்,என் கணவரைக் கேட்டு முடிவு சொல்கிறேன், என்றாள். கண் விழித்துப் பார்த்தால், கணவரும் ஆச்சர்யத்துடன் ஏதோ சொல்ல முயன்றார். இருந்தாலும், நீ எதையோ சொல்ல எழுந்தாய்! நீயே முதலில் சொல் என்று சிவகுரு சொல்ல அவள் தன் கனவை எடுத்துச் சொன்னாள். சிவகுரு தனக்கும் இதே அனுபவம் உண்டானதைக் கூறினார். நானும் சிவனிடம் உன்னைப் போலவே மனைவியிடம் கேட்டு முடிவு சொல்வதாகக் கூறிவிட்டேன், என்றார். இத்தம்பதிக்கு பிறந்த நல்ல பிள்ளை தான் ஆதிசங்கரர். உண்மையான மனைவி, கணவனின் இல்லத்தில் அடிமை. இதயத்தில் அரசி, என்ற ரஸ்கினின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது! அன்பு, பொறுமை, தியாகம், அருள், சகிப்புத்தன்மை, அறம் சார்ந்த பண்புகளை குடும்பத்தில் வளர்க்க வேண்டியது பெண்ணின் கடமை. அறம் செய்தால் அன்பு விளையும் அன்பினால் அருள் தோன்றும் அருளால் தவம் விளையும் தவத்தால் சிவம் தோன்றும் சிவனும் ஜீவனும் ஒன்றாகும் பெற்ற சிற்றின்பமே பேரின்பமாகும், என்பதை உணர்ந்து இறைநம்பிக்கையோடு இல்லறத்தை தொடர்வோம். வாழ்வுக்குப் பொருள் (பணம்) தேவை. ஆனால், வாழ்வதற்கும் ஒரு பொருள் (அர்த்தம்) தேவை அல்லவா?