பதிவு செய்த நாள்
26
அக்
2012
01:10
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு அவற்றில் முக்கியமான சில...
காசி யாத்திரை: மணமகன் துறவு பூண எண்ணி எளிய ஆடை உடுத்தி, விசிறி, குடை ஏந்தி, மரப்பாதுகை அணிந்து காசியை நோக்கிச் செல்லத் துவங்குகின்றான். அப்போது மணப்பெண்ணின் தந்தை அவன் முன் வந்து இல்லறவாழ்வின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் விரிவாகச் சொல்லி, அவன் இல்லறத்தை மேற்கொள்ள, தன் மகளையும் துணைநலமாக, தருவதாக வாக்களித்து, மணமகனை அழைத்து வருவது காசி யாத்திரையாகும்.
மாலை மாற்றல்: மணப்பெண்ணும் மணமகனும் தம்தம் தாய்மாமன் தோள்களில் அமர்ந்து, ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலை மாற்றும் நிகழ்ச்சி இது. கணவன் மனைவி என்கிற உறவு, ஈருடல் ஓர் உயிர் என்று இரண்டறக் கலக்கும் நிலையில், ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணிய வைப்பது மாலை மாற்றல்.
ஊஞ்சல் அமர்த்தி லாலி பாடுதல்: இந்நிகழ்ச்சியில் ஊஞ்சல் சங்கிலி, இல்வாழ்க்கைக்கு, இறைவனிடத்தில் ஏற்படுத்திய தொடர்பாகவும், ஆடும் ஊஞ்சல், மேடு பள்ளம், சலனம் நிறைந்த வாழ்க்கைப்பாதையை இருவரும் இணையாக அமைதியாக உறுதியாகக் கடக்க வேண்டிய முறையையும் உருவகப்படுத்துவதாகும்.
மாங்கல்ய தாரணம்: தேர்ந்து எடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மணப் பெண்ணை நேராக நோக்கி அவள் கழுத்தில் மங்கள தாலியைக் கட்டுகின்றான். முதல் முடிச்சை மணமகனும் மற்ற இரண்டை அவன் சகோதரியும் போட மாங்கல்ய தாரணம் நடைபெறுகின்றது.
கைப்பிடித்தல் (பாணிகிரஹணம்): மணமகன், விரல்கள் மேல் குவிந்த பெண்ணின் வலது கையை தனது வலது கையால் எல்லா விரல்களும் சேர்ந்திருக்கும் வண்ணம் பிடிப்பதே பாணிகிரஹணம் ஆகும் நான் முதுமையடைந்த பின்னும் உன்னை கைவிடமாட்டேன் என மணமகன் மணமகளிடம் கூறுவதாகும்.
ஸப்தபதி (ஏழடி வைத்தல்): ஏழடி எடுத்து வைக்கும் பெண்ணே, உனக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் உன் முதலடியில் அன்னமும், இரண்டாவதில் தேஹபுஷ்டியும் மூன்றாவதில் விரத அனுஷ்டானமும், நாலாவதில் சுகமும், ஐந்தாவதில் பசுக்கள் விருத்தியும், ஆறாவதில் ருதுக்களால் அனுகூலமும், ஏழாவதடியில் ஹோமம் செய்யும் ஆற்றலையும் அளிக்க உன்னை பின் தொடர்வாராக.
நலுங்கிடல்: திருமண தினத்தின் மாலை, மணமக்கள் மனசாந்தியும் சுகமும் பெறும் வகையில் கேளிக்கையும் குதூகலமும் பொங்கும் நிகழ்ச்சியே நலுங்கிடலாகும். மணமகள் மணமகனை, தன்இனிய பாட்டினால் நலுங்கிட அழைக்கின்றாள். சுற்றமும் நண்பரும் சூழ சிரிப்பும் கேலியும் நிறைந்து எல்லோரையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சி நலுங்கிடல் ஆகும்.