நிலக்கோட்டை; தை அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஏராளமானோர், முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயில் வரலாற்று சிறப்புமிக்கது. தமிழகத்தில் ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பரிகார ஸ்தலமாக உள்ளது. நேற்று தை அமாவாசையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக இங்கு குவிந்தனர். இக்கோயில் அருகே உள்ள வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆஞ்சநேயரை நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். பின்னர் மோட்ச தீபம் ஏற்றி, காகங்களுக்கு சாதம் வைத்து வழிபாடு நடத்தினர். நிலக்கோட்டை டி.எஸ்.பி., முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.