அபுதாபி சுவாமி நாராயன் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2024 01:02
அபுதாபி; முதல் இந்து கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. மஹந்த் சுவாமி மகராஜ் பூஜைகள் செய்தார்.
அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் இந்து கோயில் கட்டப்பட்டு வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி வருகிறது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். இதற்காக கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. மஹந்த் சுவாமி மகராஜ் பூஜைகளை செய்து வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கும் சுவாமி நாராயன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இக்கோவில் வடஇந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரக்கதின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோவில் கட்ட, 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இத்துடன் கூடுதலாக, 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த, 2019ம் ஆண்டு கொடுத்தது. இதனையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிபடத்தக்கது.