பதிவு செய்த நாள்
15
பிப்
2024
04:02
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழாவில், நடைபெறும் தீ பந்த சேவைக்கு, பக்தர்கள் தீப்பந்தத்தை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசிமகத் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழா, நாளை இரவு கிராம சாந்தியும், 18ம் தேதி காலை கொடியேற்றமும் நடைபெற உள்ளது. 21ம் தேதி இரவு கருட சேவையும், 22ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 23ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. 24ம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது. 25ம் தேதி காலையில் தண்ணீர் சேவையும், மாலையில் தீ பந்த சேவையும் நடைபெறும். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ பந்தங்களை எடுத்து, தேர் செல்லும் வீதிகளில் வந்து, கோவிலில் நேர்த்திக் கடனை செலுத்துவர். இதற்காக பக்தர்கள் ஏற்கனவே உள்ள தீப்பந்தங்களை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காரமடை அரங்கநாதர் கோவிலில், சூலூர் அருகே உள்ள காடாம்பாடியை சேர்ந்த பக்தர்கள், தீப்பந்தத்தை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: நாங்கள் ஒவ்வொரு ஆண்டும், பந்த சேவை எடுத்து வந்து, அரங்கநாத பெருமாளுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறோம். ஏற்கனவே, 16 அடி நீளமுள்ள தீப்பந்தத்தை, பக்தர்கள் வாங்கிக் கொடுத்த, 30 மீட்டர் காடா துணியால், மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. பந்தத்தை நன்கு உருட்டி, கெட்டி தன்மையாக இருக்க, நூல் கயிற்றால் கட்டி, அதன் மீது துணியை சுற்றி தைக்க வேண்டும். இந்த தீ பந்தத்துக்கு, கோவிலில் கொடியேற்றம் அன்று சிறப்பு பூஜை செய்து, எங்கள் கிராமத்திற்கு எடுத்து செல்வோம். அங்கு, ஒவ்வொரு வீடுகளுக்கு சென்று, உஞ்சை விருத்தி வாங்குவோம். இந்த தீ பந்த சேவையில் ஏராளமான பக்தர்கள் தீப்பந்தத்தை எடுத்து ஆடி வருவார். பழைய தீப்பந்தத்தை புதுப்பிக்கும் பணியில், ஒவ்வொரு பக்தர்களும் ஈடுபடுவர். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.