பழநிக்கு மாலையிட்டு பாதயாத்திரை வந்த ஸ்பெயின் நாட்டு பெண் பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2024 05:02
மூணாறு; மூணாறில் இருந்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா 47, மாலையிட்டு பழநிக்கு பாதயாத்திரை சென்றார்.
அவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூணாறுக்கு சுற்றுலா வந்தபோது போதமேட்டைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி சிவா 32,வுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு வந்த மரியா சிவாவை சந்தித்தபோது அவர் பழநிக்கு பாத யாத்திரை சென்று திரும்பியதை அறிந்தார். அவருக்கு பழநி சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. கடந்தாண்டு மூணாறுக்கு வந்தவர் சிவாவுடன் பழநி சென்றார். அப்போது மாலையிட்டு, விரதம் இருந்து பழநிக்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்தார். இந்நிலையில் ஸ்பெயினில் இருந்து கடந்த வாரம் மூணாறுக்கு வந்த மரியா மாலையிட்டு விரதமிருந்து போதமேடு உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண் பக்தர்கள் உள்பட 45 பேர் கொண்ட குழுவுடன் பிப்.14 நள்ளிரவில் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றார். மூணாறில் இருந்து 120 கி.மீ. தூரம் நடந்து மரியா உள்பட குழுவினர் நாளை (பிப்.17) பழநி சென்றடைகின்றனர். நமது கலாச்சாரப்படி சேலை உடுத்தி மாலை அணிந்து மரியா செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆண்டுதோறும் பழநிக்கு பாதயாத்திரை செல்ல வேண்டும் என்பது மரியாவின் விருப்பம்.