ஐதராபாத்: தெலுங்கானாவில் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு வந்த போலீசார் சீருடையுடன் தீ மிதி விழாவில் பங்கேற்று பூக்குழி இறங்கிய புகைப்படம், வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நார்கேட் பள்ளி என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோயில் திருவிழா நடந்தது. இதில் பாதுகாப்புக்காக உள்ளூர் பெண் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விழாவில் முக்கிய நாளான நேற்று தீ மிதி விழா நடந்தது. இதில் அப்பகுதி கிராமவாசிகள் பூக்குழி இறங்கினர். அப்போது பாதுகாப்புக்காக வந்த பெண் போலீசார் மற்றும் சக போலீசாரும் சீருடையுடன் பூக்குழி இறங்கினர். இதன் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சீருடையுடன் தீ மிதித்தது குறித்து துறை ரீதியாக விளக்கம் கேட்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.