மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தது என் பாக்கியம்; பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2024 07:02
மதுரை; மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 7: 32 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார். வெள்ளை குர்தா, வேட்டி அணிந்திருந்தார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்குமணி, இணை கமிஷனர் கிருஷ்ணன் வரவேற்றனர்.
பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பொற்றாமரை குளத்தை பிரதமர் பார்வையிட்டார். அம்மன், சுவாமி சன்னதியில் வழிபட்டார். சிறப்பு பூஜை நடந்தது. கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சுப்புலட்சுமி பங்கேற்றனர். இரவு 8:03 மணிக்கு கோயிலில் இருந்து பிரதமர் புறப்பட்டார். கோயிலுக்கு வெளியே காத்திருந்த மக்களை நோக்கி வணங்கினார். கையை அசைத்தார். பசுமலை கேட்வே ஹோட்டலுக்கு சென்றார். இரவு அங்கு தங்கினார். கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2021 சட்டசபை தேர்தலின் போது ஏப்.,2ல் மதுரை பிரசார கூட்டத்தில் பங்கேற்க முதல்நாளே பிரதமர் வருகை புரிந்தார். பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இரவு பசுமலை கேட் வே ஓட்டலில் தங்கினார்.
பிரதமர் மோடி தனது வலைதள பதிவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.