சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் துவஜாரோஹணம்; பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2024 12:02
சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், பத்மாவதி தாயார் கோவில் நிர்மானிக்கப்பட்டு கடந்தாண்டு சம்ப்ரோக்ஷணம் விமர்சையாக நடந்தது. முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இன்று காலை 8:00 மணி முதல் 11:30 மணிக்குள் துவஜாரோஹணம் எனும் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் பத்மாவதி தாயார் கொடிமரம் முன் எழுந்தருள சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரம் முழங்க துவஜாரோஹணம் எனும் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் மார்ச் 6ம் தேதி வரை, தினமும் காலை 9:00 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் வாகன புறப்பாடு நடக்கிறது. இதில் 4ம் தேதி மாலை கருட வாகன புறப்பாடும், 6ம் தேதி ரத உற்சவமும் நடக்கிறது. மார்ச், 3ம் தேதி கஜ வாகன புறப்பாடு மாடவீதிகளை வலம் வருகிறது. ஆரத்தி எடுக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. தினமும் மதியம், 12:30 மணி முதல் 2:00 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடக்கிறது. மார்ச் 5ம் தேதி வரை தினமும் மாலை, 5:00 மணி முதல் 6:00 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. அனைத்து நாட்களும் மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை அன்னதானம் வழங்கப்படுகிறது. 8ம் தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.