நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2012 10:10
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நாளை(30ம் தேதி) காலை நடக்கிறது.நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாளை(30ம் தேதி) முதல் நவம்பர் 13ம் தேதி வரை நடக்கிறது. திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் காந்திமதி அம்பாள் சன்னதியில் நாளை(30ம் தேதி) காலை 6.40 மணிக்கு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 30ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து அம்பாள் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.நவ.8ம் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு கீழ ரதவீதி, தெற்கு ரத வீதி, பேட்டை ரோடு வழியாக காலை 5 மணிக்கு காமாட்சி அம்மன் கோயிலை சப்பரம் சென்றடையவுள்ளது. 9ம் தேதி மதியம் 12.15 மணிக்கு கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுத்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் டவுன் நான்கு ரதவீதிகளிலம் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.10ம் தேதி காலை 4.15 மணிக்கு அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவ விழா நடக்கிறது. பின் 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரத வீதிகள் மற்றும் பட்டின பிரவேசம் வீதி உலா நடக்கிறது.11ம் தேதி முதல் 13ம் தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடக்கிறது. இத்தகவலை நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் அறிக்கையில் கூறியுள்ளார்.