பதிவு செய்த நாள்
29
அக்
2012
10:10
தஞ்சாவூர்: திட்டை கோவிலுக்கு, கருங்கல் ஸ்படிக லிங்கத்தை விட, ஆயிரம் மடங்கும் அதிரும் தன்மை கொண்ட சுயம்பு ஸ்படிக லிங்கத்தை, மதுரை பக்தர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தஞ்சையிலிருந்து, பத்து கி.மீ., தூரத்தில், திட்டை கிராமத்தில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவக்கிரஹங்களில் குருபகவான் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. கோவில் மூலவர் சுயம்புமூர்த்தி, இங்கு வசிஷ்ட முனிவர் தங்கியிருந்து பூஜை செய்ததால், வசிஷ்டேஸ்வரர் என, அழைக்கின்றனர்.
இந்த மூலவரின் விமானத்தில் சந்திரகாந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த கற்கள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு, 24 நிமிடங்களுக்கு, ஒருமுறை, ஒரு சொட்டு நீரை மூலவர் மீது சொட்டுகின்றது. இதை இயற்கையாகவே இறைவனுக்கு நடக்கும் அபிஷேகம் என, பக்தர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.இத்தகைய சிறப்புமிக்க திட்டை கோவிலுக்கு, மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் கோபாலகிருஷ்ணன் என்பவர், தூய ஸ்படிக லிங்கத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதையொட்டி கோவிலில் சிற ப்பு ஹோமங்கள், மிருத்தியஞ்ச ஜெபம் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்து, ஸ்படிக லிங்கத்தை கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜூவிடம் அளித்தார். இதுகுறித்து செயல் அலுவலர் கோவிந்தராஜூ கூறுகையில், ""32 வகையான பொருட்களால் லிங்கங்கள் உருவாக்கப்படும். எந்த பொருளை கொண்டு லிங்கம் உருவாக்கப்படுகிறதோ, அதற்கேற்ப அருள் வழங்கும் சக்தி இருக்கும். இதில், 32 வகையிலும் சேராமல் சுயம்புவாக கிடைப்பது ஸ்படிக லிங்கம். ஒரு வினாடிக்கு, 32 ஆயிரத்து, 768 முறை நேர் மறையாக அதிரக்கூடியது. கருங்கல்லால் செய்ததை விட, ஆயிரம் மடங்கு அதிர்வு இ ருக்கும். இதை வழிபட்டால் நவக்கிரஹ ங்களால் வரும் தீய பலன்களை குறைக்கும். இதுபோல, தமிழகத்தில் சிதம்பரம், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் உள்பட முக்கிய ஸ்தலங்களில் மட்டுமே ஸ்படிக லிங்கம் உள்ளது. திட்டை கோவிலுக்கு அன்பளிப்பாக கிடைத்துள்ள ஸ்படிக லிங்கத்தை பக்தர்கள் அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட, துறை ரீதியில் அனுமதி பெற்று, விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.