காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2024 08:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடிமரம் அருகில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், கங்காபவானி சமேத பரமசிவன் ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்தகண்ணப்பா, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, சன்டிகேஸ்வர சுவாமி, மூலவர் சன்னதி அருகில் எழுந்தருளினர். திருக்கோயில் வேத பண்டிதர்கள் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர். முன்னதாக கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளை செய்ததோடு, ஹோமப் பூஜைகளை செய்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் உள்ள கங்கா நீரால் தங்க கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாசிவராத்திரி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. "ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா" என்ற பக்தி முழக்கங்களுடன் பக்தர்கள் சிவனை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு மற்றும் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.