12 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம்; திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் குளத்தில் வெளிப்பட்ட சங்கு.. பக்தர்கள் பரவசம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2024 06:03
காஞ்சிபுரம்; திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும். அதன்படி, நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடீய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு) வன விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆதியில் மார்க்கண்டேய மகரிஷி இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது. நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். இன்று வெளிபட்ட இது 8 வது சங்காகும். இதைக்கண்ட பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.