சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2024 04:03
சபரிமலை; சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சபரிமலையில் தற்போது பங்குனி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 13 மாலை நடை திறந்தது. 14 அதிகாலை முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் பத்து நாள் உத்திரத் திருவிழா இன்று (16ம்தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதற்காக அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 9:30மணிக்கு தந்திரி மகேஷ் மோகனரரு தங்க கொடிமரத்தில் கொடியேற்றிய போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷம் எழுப்பினர்.. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் மற்றும் தேவசம்போர்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாளை 17 ம்தேதி முதல் 24 வரை தினமும் மதியம் உற்சவ பலி நடைபெறும். 20 முதல் 24 வரை இரவு 9:00 மணிக்கு யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 24 நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 25 காலை 11:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் திரும்பியதும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.