பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
கும்பகோணம்: கீழகொற்கை சாந்த சற்குண மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே கீழகொற்கை கிராமத்தில் சாந்த சற்குண மாரியம்மன் கோவில், பல ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல், கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இதையடுத்து திருப்பணி குழு அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு கும்பாபிஷேகத்துக்கான பாலாலாயம் நடந்தது. இதைத்தொடர்ந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த, 26ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியத்தோடு புறப்பட்டு, கோவிலின் மூலவர் கோபுரம், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு வந்தது.பின்னர் காலை, 11.30 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹாகும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாரதனையும், பிரதாசமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவில், தஞ்சை எம்.எல்.ஏ., ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன், யூனியன் துணைத்தலைவர் சின்னையன், முன்னாள் நகர செயலாளர் சேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன் தலைமையில், கீழகொற்கை கிராமத்தினர் செய்திருந்தனர்.