பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது.ஈஸ்வரன் கோவில்களில், ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி பவுர்ணமி தினத்தில் மட்டும், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.அன்று, அரிசி சாதத்தை உடல் முழுவதும் பூசிய நிலையில், அன்ன ஈஸ்வராக, சிவன் காட்சியளிப்பார். அன்ன அலங்காரத்தில் சிவனை வழிபட்டால், ஒரு கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம். அன்ன ஈஸ்வரனின் பலன், மற்ற உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிரசாத அன்னத்தை, கோவில் குளத்திலும், ஆற்றிலும் கரைப்பது வழக்கம்.நேற்று, ஐப்பசி பவுர்ணமியையொட்டி, ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மகன்யாச ருத்ரஜபம், அபிஷேகம், மாலை, 6 மணிக்கு அன்னாபிஷேகம், அலங்காரம், மாலை, 8 மணிக்கு மகா தீபாராதனை, தொடர்ந்து அன்ன விஸர்ஜனம், பிரசாத வினியோகம், மறு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.கோட்டை ஈஸ்வரன் கோவிலில், நட்டாற்றீஸ்வரர் கோவில், ஈரோடு திருநகர் காலனி, கற்பக விநாயகர் கோவில், பார்க் ரோட்டில் உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், சோழீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், சென்னிமலை கைலாசநாதர் கோவில், பெருந்துறை சோழீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.உதவி ஆணையர் வில்வமூர்த்தி ஏற்பாடுகளை செய்தார். பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 100 கிலோ அரிசியில் அன்னம் தயாரித்து, சிவபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை உதவி ஆணையர் நடராஜன், ஆயவாளர் பாலசுந்தரி ஆகியோர் செய்தனர்.