பதிவு செய்த நாள்
02
ஏப்
2024
12:04
திருப்பதி; திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் இன்று (ஏப்.,2ல்) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் ஏப்ரல் 9ம் தேதி உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடைபெற்றது. உகாதிக்கு முந்தைய செவ்வாய்கிழமை, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்தநிலையம் தொடங்கி பங்காருவாகிலி வரை, ஸ்ரீவாரி கோவிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோவில் வளாகம், பொட்டு, சுவர்கள், கூரை, பூஜை பொருட்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின் நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டா மற்றும் பிற வாசனைப் பொருள்கள் கலந்த புனித நீர், கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர்கள் சாஸ்திர முறைப்படி செய்தனர்.