பதிவு செய்த நாள்
02
ஏப்
2024
07:04
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரை பெருவிழாவும், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் ஆகிய கோவில்களில் பிரம்மோற்சவமும், இம்மாதம் நடக்க உள்ளன. வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா, வரும் 13ம் தேதி விநாயகர் வழிபாடு, 14ம் தேதி கொடியேற்றுதல் என துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது.
மூன்றாம் நாளான 16ம் தேதி, வெள்ளி அதிகார நந்தி மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் கிரிவலம் செல்லும் நிகழ்வு நடக்கிறது. ஏழாம் நாளான 20ம் தேதி, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட சுவாமி யர், திருத்தேரில் உலா செல்கின்றனர். இறுதியாக, 24ம் தேதி, வியாபாரிகள் சங்கத்தினர் உற்சவம் நடத்துகின்றனர். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், கடந்த பிப்., 1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாககொண்டாடாமல் தடைபட்ட சித்திரை பிரம்மோற்சவ விழா, தற்போது நடக்கிறது. சேனை முதல்வர் புறப்பாடு வரும் 16ம் தேதியும், மறுநாள் கொடியேற்றுதலுடன் துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. ஐந்தாம் நாளான 21ம் தேதி, கருட சேவையாற்றுதலும், ஏழாம் நாளான 23ம் தேதி, திருத்தேரில் சுவாமி உலாவும், 25ம் தேதி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, வரும் 22ம் தேதி அங்குரார்ப்பணம் நடத்தி, 23ம் தேதி கொடியேற்றுதலுடன் துவங்கி, மே 2ம் தேதி வரை நடக்கிறது. ஐந்தாம் நாளான வரும் 27ம் தேதி, கருட சேவையாற்றுதலும், ஏழாம் நாளான 29ம் தேதி, திருத்தேரில் உலா செல்லுதலும்,10ம் நாளான மே 2ம் தேதி தெப்போற்ச வமும் நடக்கிறது.