முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் கிராமத்தில் வாழவந்தாள் அம்மன் கோயில் 18ம் ஆண்டு பங்குனி விழாவை முன்னிட்டு கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது.தினமும் அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தது பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக விநாயகர் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம்,அக்னிசட்டி, வேல் குத்தி சுப்பிரமணியபுரம், முருகன் கோயில் தெரு உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.பின்பு வாழவந்தாள் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வாழவந்தாள் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.