தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா; குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2024 01:04
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு தமிழக முழுவதிலுமிருந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த விழாவின்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தீச்சட்டி,கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்தாண்டிற்க்கான திருவிழா கடந்த 28ம் தேதி இரவு 10:50 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா ஏப்.4ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தற்போதிலிருந்தே தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 5ம் தேதி இரவு 7: 10 மணிக்கு மின் அலங்கார தேரோட்டம் நடைபெற உள்ளது.6ம் தேதி காலை 7:40 மணிக்கு பால்குடம் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லாக்கும் நடைபெற உள்ளது.7ம் தேதி கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவை ஒட்டி மானாமதுரை, சிவகங்கை, இளையான்குடி, மதுரை, அருப்புக்கோட்டை,காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.