பதிவு செய்த நாள்
03
ஏப்
2024
11:04
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகையில் எழுந்தருளும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உயரழுத்த மோட்டார் பொருத்திய பம்பு பயன்படுத்த தடை விதித்தது. பாரம்பரிய கை பம்புகளை அனுமதிக்க உத்தரவிட்டது.
மதுரை தல்லாகுளம் நாகராஜன் தாக்கல் செய்த மனு: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார். பக்தர்கள் கள்ளழகர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். கை மூலம் இயக்கப்படும் பம்பு பொருத்திய ஆட்டுத்தோலால் செய்த பைகளை (துருத்தி) பயன்படுத்தி கள்ளழகர் மீது வாசனை திரவியங்களை தெளிப்பர். இப்பாரம்பரியம் 400 ஆண்டுகளுக்கும்மேல் நடைமுறையில் உள்ளது. இப்பைகளை விற்பனை செய்ய பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் மதுரைக்கு வருவர். தொழில்நுட்ப வளர்ச்சியால் உயரழுத்த பம்புகளை தண்ணீர் தெளிக்க பயன்படுத்துகின்றனர். அது தோல் பைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து வேகமாக வெளியேறும் தண்ணீர் கள்ளழகர் அணிந்துள்ள கிரீடம், நகைகளுக்கு சேதம் ஏற்படுத்துகிறது. ரசாயனம் கலந்த ரோஸ் வாட்டரை உயரழுத்த பம்பு மூலம் தெளிப்பதால் உலோகத்தாலான சிலைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கள்ளழகரை பல்லக்கில் சுமந்து செல்லும் பக்தர்களின் கண், காது, மூக்கில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.சித்திரைத் திருவிழா ஏப்.,12 ல் துவங்குகிறது. தண்ணீர் தெளிக்கும் நிகழ்வு ஏப்.,22 மற்றும் 23 ல் நடைபெறும். உயரழுத்த மோட்டார் பொருத்திய பம்பு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். ஆட்டுத் தோலால் செய்த பாரம்பரிய கை பம்புகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: அதிக மக்கள் கூடும் இடங்களில் குறிப்பாக திருவிழாக் காலங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது, சட்டம்- ஒழுங்கை பராமரிக்க ஏற்பாடுகளை செய்வது அரசின் கடமை. விழாவை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யும் பொறுப்பு மாவட்ட நிர்வாகம், காவல் துறையினருக்கு உண்டு. ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக பெண்கள் தொந்தரவிற்கு ஆளாகின்றனர் என்பதை கவனத்தில் கொள்கிறேன். குறும்புக்கார இளைஞர்கள் வேண்டுமென்றே பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தண்ணீரை தெளிக்கின்றனர். அனைத்து வகையான துன்புறுத்தல்களிலிருந்தும் பெண்களை பாதுகாக்க சட்டங்களை அரசு இயற்றியுள்ளது. இதுபோன்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது. உயரழுத்த குழாய்களைக் கொண்ட பம்புகளை பயன்படுத்துவதை அனுமதிக்க மறுத்தால், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களைத் தடுக்கலாம். துறவு மேற்கொண்டவர்கள், நேர்த்திக்கடன் செலுத்த விரதம் மேற்கொள்ளும் நபர்கள், கோயில் நிர்வாகத்திடம் பெயர் பதிவு செய்தவர்களை மட்டுமே வைகையில் கள்ளழகர் பிரவேசிக்கும் போது சிலை மீது பாரம்பரிய முறையில் மட்டுமே தண்ணீர் தெளிக்க அனுமதிக்க வேண்டும். அழகர்கோவிலிலிருந்து வைகை ஆற்றில் எழுந்தருளும்வரை வழிநெடுகிலும் கள்ளழகர், அர்ச்சகர்கள் மீது தண்ணீர் தெளிக்காமல் பார்த்துக் கொள்வது மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் கடமையாகும். எழுந்தருளும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பாரம்பரிய முறையில் தண்ணீர் தெளிக்க அனுமதிக்கப்படுவர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்கள் மீது தண்ணீர் தெளிக்கக்கூடாது. உரிய உத்தரவை கலெக்டர் பிறப்பிக்க வேண்டும். தற்போது மட்டுமன்றி இனி வரும் காலங்களிலும் இதை உறுதி செய்வது போலீஸ் கமிஷனர்,எஸ்.பி.,யின் கடமையாகும். மனு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.