பதிவு செய்த நாள்
04
ஏப்
2024
10:04
சென்னை: சென்னையில், தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ராமாயண புனித நுால், வரும் 8ம் தேதி, அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பப்பட உள்ளது. துளசிதாசர் எழுதியுள்ள, ஸ்ரீ ராம் சரித மானஸ் என்ற ராமாயண கதை, 522 தங்கத் தகடுகளில் எழுதி, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஒப்படைக்கப்பட உள்ளது. இது, சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு நகை கடையில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது.
விருப்பம்; இதுகுறித்து, உம்மிடி பங்காரு நகை கடை நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் உம்மிடி கூறியதாவது: லெட்சுமி நாராயணன் எனும் ராம பக்தர், 1,000 ஆண்டுகளை கடந்தும், ராமர் கோவிலில் ராமாயண கதை நுால் இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என, தன் விருப்பத்தை தெரிவித்தார். அது குறித்து ஆறு வாரங்கள் தீவிரமாக ஆராய்ந்து, தாமிரத் தகட்டில், சுத்தமான தங்க முலாம் பூசி, அதில் எழுத்துக்களை பொறிக்கலாம் என முடிவானது. அதன்பின், எங்கள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர், அயோத்தி ராமர் கோவில் கருவறையில் இந்த புனித நுால் வைக்கப்பட உள்ள இடத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப வடிவமைப்பை துவங்கினார். மேலும், இந்த நுாலை வைப்பதற்கான பீடத்தையும் நாங்களே வடிவமைத்து உள்ளோம். அதன்படி, துளசிதாசர் எழுதியுள்ள, ஸ்ரீ ராம் சரித மானஸ் கதையின் முக்கிய பகுதிகளை, 522 தகடுகளில் பொறித்துள்ளோம். ஒரு மி.மீ., தடிமனுள்ள தகடுகளின் இரண்டு பக்கங்களிலும் எழுத்துகளை பொறித்துள்ளோம். இவற்றின் மொத்த எடை, 147 கிலோ.
எட்டு மாதங்கள்; இதில், பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், சுந்தர காண்டம், உத்தர காண்டம் ஆகிய அனைத்து பாகங்களிலும் உள்ள போதனைகள், ஆன்மிக நுண்ணறிவு கருத்துகள், முக்காலத்துக்கும் பொருந்தும் ஞானம், சுயசிந்தனை ஆகிய கருத்துகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஸ்லோகங்கள், சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை உருவாக்க, எட்டு மாதங்கள் தேவைப்பட்டன. இதில், கணினியின் துணையுடன் தங்க வேலைப்பாடுகள் செய்யும் கலைஞர்களின் கைத்திறனும் இணைந்து, புனித நுாலாக உருப்பெற்றுள்ளது. நுாலின் முதல் ஏடு மற்றும் இறுதி ஏட்டை, வெள்ளி மற்றும் தங்கத்தால் உருவாக்கி உள்ளோம். முதல் பக்கத்தில் ராமர் பட்டாபிஷேக காட்சி, வண்ணப் படமாக்கப்பட்டு உள்ளது. நுாலைச் சுற்றி தாமரை மலர்கள் அலங்கரிக்கின்றன. இந்த நுால், இரண்டு நாட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. வரும் 8ம் தேதி அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. ராம நவமியன்று, கோவில் கருவறைக்கு, ராம பக்தர் லெட்சுமி நாராயணன் அர்ப்பணிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.