பதிவு செய்த நாள்
04
ஏப்
2024
10:04
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவிற்காக இன்று ஆயக்கால் பூஜை செய்வதற்கு தேர் ஷெட் அகற்றப்பட்டது.
அவிநாசியில் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழா, ஏப்ரல் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாயன்மார்களால் பாடல் பெற்ற கொங்கேழு சிவத்தலங்களில் முதன்மையானதும் சுந்தரமூர்த்தி நாயனார் முதலை உண்ட பாலகனை உயிரோடு மீட்ட அதிசயம் நிகழ்த்தியதும் கொங்கு சோழர்கள், கொங்கு பாண்டியர்கள், விஜயநகர மைசூர் மன்னர்கள் ஆகியோரது பழமையான கல்வெட்டுகளை கொண்ட பெருமையுடைய அவிநாசியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில்,2024ம் ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது .அன்று இரவு திருமுருகநாதர் வருகை, 15ம் தேதி புதன் கிழமை சூரிய சந்திர மண்டல காட்சிகள், 16ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்னம் ஆகிய வாகன காட்சிகள், 17ம் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லாக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. அதன் பின்னர், 18ம் தேதி 63 நாயன்மார்கள் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 19ம் தேதி கற்பக விருட்சம் திருக்கல்யாணம் உற்சவம், யானை வாகன காட்சிகள், 20ம் தேதி அதிகாலையில் பூர நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. சித்திரைதேர் திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான, சோமஸ் கந்தர் எழுந்தருளும் பெரிய தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியானது 21ம் தேதியும், அதனைத் தொடர்ந்து 22ம் தேதி பெரிய தேர் வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தல் நடைபெறுகிறது.
23ம் தேதி அம்மன் தேர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் பெருமாள் தேர்கள் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, 24ம் தேதி வண்டித்தாரை மற்றும் இரவு பரிவேட்டை, 25ம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியும், 26ம் தேதி நடராஜப் பெருமான் தரிசனம் மற்றும் மாலை கொடி இறக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. சித்திரை தேர் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் மயில்வாகன காட்சி 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, நேற்று பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவை மூடி வைக்கப்பட்டிருந்த ஷெட் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேருக்கு ஆயக்கால் பூஜை போடப்படுகிறது. மேலும், தேருக்கு பாதுகாப்பாக போடப்பட்ட மேற்கூரையை அகற்றி, பக்தர்கள் நிழலில் நின்று தேரில் ஏறி சாமியை தரிசனம் செய்வதற்காக படித்துறையில் வைக்கப்பட்டுள்ளது. சித்திரை தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.