சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; தீப்பற்றும் பொருட்களை கொண்டு வந்தால் அனுமதி கிடையாது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2024 10:04
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு நாளை ஏப். 6 முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்தால் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் நாளை (ஏப். 6) பிரதோஷம், ஏப்.8ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 6 முதல் 9 வரை 4 நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சதுரகிரி மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகளவில் இருப்பதால் செடி, கொடிகள், அரிய வகை மரங்கள் மிகவும் காய்ந்துள்ளது. ஓடைகளில் நீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வனத்தை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். பீடி, சிகரெட், தீப்பெட்டி மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு வந்தால் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.