பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் கோடி அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2024 01:04
பிள்ளையார்பட்டி; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி 55வது நாளாக கோடி அர்ச்சனைப் பெருவிழா நடந்தது.100 வது நாளான மே 23ல் விழா நிறைவு பெறுகிறது.
நகரத்தார் நவ கோயில்களி்ல ஒன்றான கற்பகவிநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாட்டு முறைகளாக கற்பகவிநாயகருக்கு 1008 கலசாபிஷேகம், அதிருத்ர மகாயாகம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது முதன் முறையாக உலக சகல உயிரினங்களின் நன்மை வேண்டி கோடி அர்ச்சனைப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தினசரி காலை, மாலைகளில் லட்சார்ச்சனை 100 நாட்கள் நடைபெறும். தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தரம் குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் அர்ச்சனை நடக்கிறது. இன்று 55ம் நாளில், காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்து, பின்னர் மருதீசர் சன்னதி முன் மண்டபத்தில் எழுந்தருளிய உற்ஸவ விநாயகருக்கு காலை, மாலை இரு வேளைகளில் சிவாச்சார்யர்களால் அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கோடி அர்ச்சனையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாட்டினை பி.க..ந.க.டிரஸ்ட் அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் செய்கின்றனர்.