அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவிற்கு புதிய நைலான் வடக்கயிறு ரெடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2024 10:04
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவிற்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து அரோகரா கோஷத்துடன் இழுக்க நைலான் வடக்கயிறு ரெடி. நாயன்மார்களால் பாடல் பெற்ற கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதும்,தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என புகழ் பெற்ற அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக , பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவற்றை தயார் செய்ய பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருந்த ஷெட் அகற்றப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், தேர் அலங்கரிக்கும் பணிகளில், தேர் முழுவதுமாக தண்ணீர் பீய்ச்சியடித்து தூசிகள், மண் படலம் அகற்றப்பட்டது. அதன் பின்னர், தேர் சக்கரங்களுக்கு கிரீஸ் அடிக்கும் பணிகள் மற்றும் தேர் முழுமைக்கும் கம்ப்ரஸர் மூலம் வார்னிஷ் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் தேரை இழுக்க நார் கொண்டு செய்யப்பட்ட வடக்கயிறு தருவிக்கப்பட்டு தேர் இழுக்கப்படும். கடந்த வருடம் 300 அடி நீளம் நாரினால் செய்யப்பட்ட வடக்கயிறு கொண்டு பக்தர்கள் தேரை இழுத்தனர். இந்த வருடம் புதியதாக நைலான் கயிறால் செய்யப்பட்ட வடக்கயிறு தருவிக்கப்பட்டுள்ளது. சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் தேரை இழுக்க முதன் முறையாக நைலான் கயிறு பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் (பொறுப்பு) கூறும் போது, இதற்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்த நாரினால் செய்யப்பட்ட வடக்கயிறு தண்ணீரில் நனைந்தாலும் வெயிலில் காய்ந்து கிடந்தாலும் சீக்கிரமாக இற்று போய் அறுந்துவிடும். தற்போது வாங்கப்பட்டுள்ள நைலான் வடக்கயிறு குறைந்தபட்சம் 3 முதல் 4 வருட தேர் விழாவிற்கு பயன்படுத்த முடியும். துறைமுகங்களில் உள்ள நங்கூரத்தில் இந்த வகையான நைலான் கயிறு கொண்டு கப்பலை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. புனேவில் உள்ள கார்வார் டெக்னிக்கல் வைஃபார்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தினர், இது போன்ற நைலான் கயிற்றினை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். நமது தமிழ்நாட்டில் திருவாரூர் தேர், தஞ்சாவூர் தேர் மற்றும் கோவை மாவட்டம் பேரூர் தேர் ஆகியவற்றுக்கு இந்த வகை நைலான் கயிறு கொண்டு பக்தர்கள் தேரை இழுக்க பயன்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது அவிநாசி பெரிய தேர் இழுப்பதற்கு ஆர்டர் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. 600 கிலோ எடையும், ஒரு பக்கத்திற்கு சுமார் 300 அடி நீளமும் கொண்டதாக இருக்கின்றது. இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் என தெரிவித்தார்.