பதிவு செய்த நாள்
11
ஏப்
2024
10:04
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதும் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ரம்ஜானை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஈகைத் திருநாள்: ஈதுல் பித்ர் என அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவும் பண்பையும், வித்தியாசமற்ற அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் நோக்கிலே உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நோன்பு முடிந்து, ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஏப்-11) உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சாலையில் இஸ்லாமியர் புனித ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
தமிழகம்: சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி மைதானம், சென்னை ராயப்பேட்டை, திருப்பூர் நொய்யல் வீதி பள்ளி வளாகம் ,கோவை உக்கடம் கரும்புக்கடை பகுதி, திருப்பத்தூர் ஆம்பூர், சேலம், ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானம், வேலூர், திண்டுக்கல், ராமநாதபுரம் கன்னியாகுமரி, தென்காசி , திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், பொட்டல்புதூர், அச்சன்புதூர் உள்பட பல இடங்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.
தலைவர்கள் வாழ்த்து: தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; மனித குலத்திற்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபிகள் நாயகம். கல்வியை ஆண், பெண் என இருவருக்கும் சமமாக்கியது அவர் காட்டிய வழியாகும். நோன்பு கடமைகளை முடித்து ஈகைப்பண்பு சிறக்க ரம்ஜான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு நல்வாழ்த்துக்கள் !
அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
புனித ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், பா.ஜ., சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்;இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகள். இவ்வாறு கூறியுள்ளனர்.