பதிவு செய்த நாள்
15
ஏப்
2024
03:04
பழநி; பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் இன்று ( ஏப்.,15ல்) கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா துவங்கியது.
பழநி கோயில் நிர்வாகத்தின் உப கோயிலால மேற்குரத வீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ஏப்.,15 முதல் ஏப்.,24 வரை பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று (ஏப்.,15ல்) காலை 10:00 மணிக்கு மேளதாளங்கள் முழக்க, மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கொடியில் சங்கு, சக்கரம், கருடாழ்வார், ராமம், சடாரி, தாம்பூலம் , வரையப்பட்டிருந்தது. கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி உற்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நாளை (ஏப்.,16) காலை சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளது. தினமும் சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்.21., மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதன்பின் சேஷ வாகனத்தில் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. ஏப்.23ல் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். ஏப்.,24 வரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.