பதிவு செய்த நாள்
17
ஏப்
2024
05:04
திருவொற்றியூர்,கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், 20 ஆண்டுகள் கழித்து, திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. சின்ன காஞ்சிபுரம் என அழைக்கப்படும் இக்கோவிலின் ராஜகோபுர பணிகள் 17 ஆண்டுகளாக நடைபெற்றதால் உற்சவம், திருவிழாக்கள் ஏதும் நடைபெறவில்லை. கடந்தாண்டு ஆகஸ்டில் திருப்பணிகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக, உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ராமநவமியை முன்னிட்டு, 9ம் தேதி ராமர் உற்சவம் துவங்கியது. விழா நாட்களில், ராமபிரான் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதன்படி, வண்ணாரப்பேட்டை பக்தவத்சலம் பெருமாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட, 22 அடி உயர திருத்தேரில், சீதாராமர் லட்சுமணருடன் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார். அப்போது, கூடியிருந்த பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். 20 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இந்த திருத்தேரோட்டத்தைக் காண, மாடவீதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சொந்த தேர் வேண்டும்; காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தனியாக சொந்த தேர் ஏதும் இல்லை. ராமர் உற்சவத்திற்காக, வண்ணாரப்பேட்டை, ஸ்ரீ பக்தவத்சலம் பெருமாள் கோவிலில் இருந்து, 25,000 ரூபாய் வாடகைக்கு தேர் எடுத்து வந்து, தேரோட்டம் நடைபெற்றது. கோவில் நிர்வாகம் கவனித்து, கோவிலுக்கென தனியாக தேர் செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.