மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகையில் தண்ணீர் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2024 03:04
ஆண்டிபட்டி; மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து இன்று பிற்பகல் 1:00 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் ஜன.,6ல் முழு அளவான 71 அடியாக உயர்ந்தது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் ஏப்.,6ல் நிறுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களில் வைகை அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு நீர் தொடர்ந்து வெளியேறியதால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 59.19 அடியாக இருந்தது. அணைக்கான நீர் வரத்து ஏதுமில்லை. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்.,23ல் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு தேவையான நீரை வைகை அணையில் இருந்து முன்கூட்டியே திறந்தால் தான் குறிப்பிட்ட நாளில் மதுரை சென்று சேரும். இந்நிகழ்ச்சிக்காக இன்று வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்.,23 வரை 216 மில்லியன் கன அடி நீர் திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், திறந்து விடப்படும் நீர் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்கும், வைகை ஆற்றப்படுகையில் உள்ள குடிநீர் திட்ட கிணறுகளில் நீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படும் என்று நீர்ப்பாசன துறையினர் தெரிவித்தனர். மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் வழக்கம்போல் அணையில் இருந்து வெளியேறுகிறது.