பதிவு செய்த நாள்
21
ஏப்
2024
08:04
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று(ஏப்.,21) காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். நேற்று முன்தினம் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அம்மன் மதுரையில் ஆட்சிபுரிந்தபோது நடந்த திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில் நேற்று இரவு இந்திர விமானத்தில் அம்மனின் திக்கு விஜயம் நடந்தது.
இதைதொடர்ந்து இன்று(ஏப்.,21) திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4:00 மணிக்கு கோயிலின் மண்டகப்படிகளாகி, சித்திரை வீதிகளில் அம்மனும், சுவாமியும் வலம் வந்தனர். கோயிலின் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8:00 மணிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கலந்து கொண்டார். திருக்கல்யாணம் காலையில் முடிந்த நிலையில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து நடைபெற்றது.
இதற்காக ரூ.30 லட்சம் செலவில் மலர்களால் மணப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஏப்.,22ல் தேரோட்டம் நடக்கிறது. அன்று மூன்று மாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. ஏப்.,23 அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் அழகர் இறங்குகிறார். இதையொட்டி 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.